அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ நகரில் சியோலோ விஸ்டா வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான கடையில் சனிக்கிழமை காலை கறுப்பு உடையணிந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
கையில் துப்பாக்கியுடன் வந்த அந்த இளைஞர் திடீரென அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில் அங்கிருந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் அந்த இளைஞரை கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து அந்த வணிக வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் டெல்லாஸ் நகரத்தைச் சேர்ந்த பாட்ரிக் க்ரூசியஸ் என்பது தெரிவந்துள்ளது. அவர் எதற்காக இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார் என்பது குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
அமெரிக்க-மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எல் பாசோ நகரில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.