வாஷிங்டன் (அமெரிக்கா): உலகளவில் கரோனாவால் மிக மோசமாகப் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
புதிதாகப் பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது. எனினும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பலர் முன்வராததால், அவர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து, அரசின் கீழ் இயங்கும் அந்தந்த மாகாண அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகர அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மாணவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்படும் என்ற வியப்பூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொள்ளும் 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு ஆப்பிள் ஏர்பாட்ஸ், 50 டாலர்கள் மதிப்பு கொண்ட பரிசு அட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஒருவேளை இன்னும் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், 25,000 டாலர்கள் வரை உதவித்தொகை, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் உள்ளிட்டவைகளும் இலவசமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெகுமதிகளைப் பெற, தடுப்பூசி செலுத்துவோர் தங்களுடன் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரை தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும், பரிசுகளைப் பெற பள்ளி அடையாள அட்டை உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்ல வேண்டும், முதல் டோஸைப் பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே ஒரு பரிசு அட்டை மட்டுமே அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் என்பன போன்ற வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நியூயார்க் நகரில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கும் வகையில் வேறு சில மாகாணங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் 50 விழுக்காடு பேர் முழுமையாக இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.