அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் டீன் சாய்ஸ் விருதுகள் வழங்கும் விழா கலிஃபோர்னியாவின் ஹெர்மோசா பீச்சில் நடைபெற்றது. இதில் திரைப்படம், இசை, தொலைக்காட்சி, விளையாட்டு, இணையம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த சாதனையாளர்களை 13 வயது டீன் பருவ வயதினரே தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டீன் சாய்ஸ் விருதுகள் வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு, இசை ஆகிய பல்வேறு துறைகளின் பிரபலங்களும் கலந்துகொண்டனர். இதில் பிரபல அமெரிக்க பாப் இசை பாடகியுமான டெய்லர் ஸ்விஃப்ட்டும் பங்கேற்றார். அப்போது அவருக்கு டீன் சாய்ஸ் அடையாளத்திற்கான புதிய பிரிவில் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அமெரிக்க கால்பந்து அணி வீராங்கனை அலெக்ஸ் மார்கன், டெய்லர் ஸ்விஃப்ட்டிற்கு வழங்கினார். இந்த பிரிவில் வழங்கப்படும் முதல் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
டெய்லர் ஸ்விப்ஃட்டிற்கு வழங்கப்பட்ட அலைச்சறுக்கு பலகையில் அவரது மூன்று பூனைகளின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த விருது பெற்ற பின் பேசிய டெய்லர் ஸ்விப்ஃப்ட், பாலின சம உரிமை, சம ஊதியம் ஆகியவற்றிற்காக போராடிவரும் அமெரிக்க கால்பந்து அணி வீராங்கனை அலெக்ஸ் மார்கன், மற்றும் அவரது அணியினருக்கு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் அனைவரும் வாழ்க்கையில் தவறுகள் செய்வது சகஜமான ஒன்றுதான். எனவே தவறுகள் நடக்கும்போது அதை நினைத்து தங்களை தாங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இளம் பருவத்தினரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக ஆகஸ்ட் 16ஆம் தேதி லவ்வர் என்ற தனது புதிய ஆல்பத்தின் ஒரு பாடல் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்தார்.