உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கலங்கி நின்று கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை, பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் கரோனா வைரஸால் பாதிப்பிற்குள்ளானவர்களை விரைவில் மீட்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சுவாசக் கோளாறு காரணமாக அவதியுற்றுவரும் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சுவாச சிகிச்சை நல்ல பலனளிப்பதாகவும் இதனால் அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகவும் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் சுவாசக் கோளாறு காரணமாக அவதியுற்றவர்களுக்கு மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி அறிவுறுத்தப்பட்ட வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, இறப்பு விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் பல நாடுகள் கருத்து தெரிவித்துவருகின்றன.
இந்தநிலையில், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மருத்துவர் கோரே ஹார்டின் கூறுகையில், சுவாசக் கோளாறு மற்றும் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 66 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளின் அடிப்படையில், இத்தகவல்களைத் தெரிவிப்பதாகவும், சுவாசக் கோளாறுகளுக்கு நிலையான சிகிச்சையளித்தால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் கூறினார்.
சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்களே கரோனா வைரஸால் அதிகளவு உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சிகிச்சையின் காரணமாக மற்ற மருத்துவமனைகளை விட தங்களது மருத்துவமனையில் 16.7 விழுக்காடு இறப்பு விகிதம் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 34 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காட்டினர் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண பிரிவிற்கு உடல் நலமாகி மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மருத்துவமனையின் மருத்துவப் பயிற்றுவிப்பாளர் ஜெஹன் அல்லாடினா, சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சிகிச்சையை பரிந்துரைப்பதாகவும், இதனை மற்ற நாடுகளுக்கு பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிரான போர் என்பது ஜனநாயக கடமை!