அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தில் அமைந்துள்ள ஃபார்மிங்கடன் பல்கலைகழகத்தில் படிப்பதற்கு போலி விசா மூலம் சென்ற 129 இந்திய மாணவர்களை அமெரிக்கா அரசு கடந்த வாரம் கைது செய்தது. மேலும் இவர்களுக்கு போலி ஆவணம் தயார் செய்து கொடுத்த 8 ஏஜென்ட்களையும் அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
எட்டு ஏஜென்ட்களுக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தூதரக உதவிகள் செய்யவும் இந்தியா அரசு முயற்சி மேற்கொண்டது. இவர்களுக்கு உதவ பிரத்யேக அதிகாரி ஒருவரையும் இந்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், ஃபார்மிங்கடன் பல்கலைகழகத்தில் வகுப்புகள், பயிற்றுநர்கள் இல்லை என்பதும், தாங்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளோம் என்பதும் தெரிந்தே இந்த மாணவர்கள் அந்த செயலை செய்துள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.