தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் முதலில் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். அங்கு உலகப்புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து அங்கிருந்து கடந்த 1ஆம் தேதி அமெரிக்கா சென்ற முதலமைச்சர், அங்குள்ள பஃபல்லோ நகரில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசலில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்படவுள்ள உலகத் தரம்வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கான கட்டமைப்பு வசதிகள் பற்றி அரசு சார்பில் ஆய்வுகள் நடைபெற்றுவருவதால், பஃபல்லோ நகரின் கால்நடைப் பண்ணையை பார்வையிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், பற்றி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் பங்கேற்றார். அதில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
தொடர்ந்து, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழில் வளத்தைப் போன்று விவசாயம், கால்நடை மற்றும் பால்வளம் உள்ளிட்ட தொழில்களை அரசு ஊக்குவித்து வளர்ச்சியடையச் செய்யும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறது.