இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைனில் விதவிதமான கேம்ஸ் விளையாடிப் பொழுதைக் கழித்தாலும், 90'ஸ் கிட்ஸ்களுக்கு அத்தகைய சமயத்தில் கார்ட்டூன் தான் சொர்க்கமாக இருந்தது. பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், முதல் வேலை தொலைக்காட்சியை ஆன் செய்து கார்ட்டூன் சேனல் வைப்பது தான். அதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த முக்கியமான கார்ட்டூனில் ஒன்றுதான் ஸ்கூபி-டூ.
ஸ்கூபி-டூ கார்ட்டூனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் எதிரொலியாக தான்,'Scoob’ என்ற பெயரில் அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், 1969இல் வெளியான ஸ்கூபி-டூ அனிமேஷன் தொடர்களின் இணை இயக்குநராக இருந்த கென் ஸ்பியர்ஸ்(82), கடந்த வெள்ளிக்கிழமை லூயி டிமென்ஷியா தொடர்பான சிக்கல்கள் காரணமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரின் மகன் கெவின் ஸ்பியர்ஸ் கூறுகையில், "கென் அவரது புத்திசாலித்தனம், கதை சொல்லும் விதம், குடும்பத்திற்கு விசுவாசம் மற்றும் அவரது வலுவான பணி நெறிமுறை ஆகியவற்றால் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
குறிப்பாக ஸ்கூபி டூ தொடர் மூலம் பலரின் வாழ்க்கையில் நீங்கா இடத்தினைப் பிடித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார்" எனத் தெரிவித்தார்