வெள்ளையின மாளிகையில் வெற்றிக்கொடி நாட்ட போகும் இந்தியர்கள்
ஹைதராபாத்: கமலாதேவி ஹாரிஸ், விவேக் மூர்த்தி, கௌதம் ராகவன் மாலா அடிகா, வினய் ரெட்டி, பரத் ராமமூர்த்தி, நீரா தாண்டன், செலின் கவுண்டர், அதுல் கவாண்டே. இந்தப் பெயர்கள் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெறப் போகின்றன. 2020ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது, கமலா ஹாரிஸ் முன்வைத்த #MyNameIs blowback to Republicans' என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக அதிக அளவிலான இந்திய வம்சாவளியினர் பைடன் ஆட்சியில் மிக முக்கிய பதவிகளை அலங்கரிக்க உள்ளனர். இதுவரை இந்திய வம்சாவளியினர் 24 பேர் வரை பைடனின் ஏ அணியில் மிக முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் அல்லது முன்மொழியப்பட்டு உள்ளனர்.
![பைடன் அரசில் இந்தியர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10302960_indian-03.jpg)
![பைடன் குழுவில் இந்தியர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10302960_indian-04.jpg)
ஜனவரி 6ஆம் தேதி ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, தலைநகர் வாஷிங்டனில் உள்ள அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு வன்முறை கும்பல் வெறியாட்டம் நடத்திய அதே நேரம்…கமலாவின் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் ஜார்ஜியாவில் இரண்டு இடங்களிலும் அமோக வெற்றி பெற்று அனைவரையும் அதிசயிக்கச் செய்தனர்.
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் பதவி ஏற்கும் நேரத்தில், வெள்ளை மாளிகையில் இந்திய-அமெரிக்க நல்வாழ்வுக்கான பல்வேறு வெற்றி கதைகளையும் கூறக்கூடும். மருத்துவம், பொருளாதாரம், டிஜிட்டல் தகவல் தொடர்பு உள்பட பல்வேறு துறைகளைப் பற்றி விரிவாக பேசக்கூடும்.
வெற்றிக் கதைகளை கூறும் அதே நேரம், தங்களது பெயர்களையும் சரியாக உச்சரிக்க கற்றுக்கொடுக்கும் வேலையையும் சேர்த்து இந்திய வம்சாவளியினர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கௌதம் ராகவன், விவேக் மூர்த்தி, மாலா அடிகா, வினய் ரெட்டி, பரத் ராமமூர்த்தி, நீரா டாண்டன், செலின் கவுண்டர் ஆகிய அட்சர சுத்தமான இந்திய பெயர்களை, அமெரிக்கர்கள் சரியாக உச்சரிப்பது கடினம். ஆகவே இவர்கள் கதைசொல்லிகள் ஆக மாறி, தங்களது பெயர் மிர்த்தி அல்ல, மூர்த்தி… கௌடாம் அல்ல, கவுதம் என்று உச்சரிக்க கற்றுக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
![பைடன் குழு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10302960_indian-02.jpg)
இந்த விஷயத்தில் இவர்கள் கமலா ஹாரிஸை பின்பற்றலாம். ஏனெனில் அவர் பலமுறை தனது பெயரை சரியாக உச்சரிப்பது எப்படி என்று அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தே சோர்ந்து போனார்.
”எனது பெயர் கமலா. ”கம-லா” என்று அழைக்க வேண்டும். அதற்கு அர்த்தம் தாமரைப்பூ. இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மலரின் நினைவாக எனது பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீருக்கடியில் முளைத்தாலும் அது நீருக்கு வெளியில் பூத்து அழகாய் மலரும். அப்படி என் வாழ்வும் மலர வேண்டும் என்பதற்காக இந்த பெயர் வைத்தார்கள்” என்று ”த ட்ரூத்ஸ் விச் ஹோல்ட்” என்ற தனது நினைவுக் குறிப்புகளில் அவர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். பலமுறை மேடைகளிலும் இதை தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு மிகவும் பிரபலமாகி இணையத்தில் வைரல் ஆகி உலா வந்தது குறிப்பிடத்தக்கது.
”கமலா என்ற பெயரை தனது குழந்தைக்கு மிகுந்த கவனத்துடனும், பலமுறை யோசித்த பிறகு இந்தப் பெயரைத்தான் வைக்கவேண்டும் என்ற முடிவோடும் வைத்தோம்” என்று கமலாவின் தாயார் சியாமளா கோபாலன் ஹாரிஸ் கூறியிருக்கிறார். கமலா ஹாரிஸின் 40வது வயதில், டைம்ஸ் பத்திரிகைக்கு 2004 ஆம் ஆண்டு பேட்டியளித்த சியாமளா, “ வலிமைமிக்க பெண்ணாக உருவெடுக்க உதவும் பெண் கடவுளை போற்றும் வகையில், அந்த பெயரை வைத்தோம்” என்று விவரித்துள்ளார்.
![பைடன் அணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10302960_indian-01.jpg)
இந்திய கலாசாரத்தின் படி லக்ஷ்மி தேவியின் 108 பெயர்களில் ஒன்றான கமலா என்ற பெயரின் பொருள், வளம் வளர்ச்சி மற்றும் பிரகாசமான எதிர்காலம் என்பதை குறிக்கும்.
கமலா ஹாரிஸ் குறித்து கருத்து தெரிவித்த ஏஏபிஐ டேட்டா நிறுவனர் கார்த்திக் ராமகிருஷ்ணன் ”பாரம்பரியம் மிக்க தமிழ் பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவர் ஹாரிஸ். ஆனால் இதை சாதகமாக்கிக் கொண்டு இந்திய-அமெரிக்க உறவுகள் பற்றியோ, தெற்காசிய- அமெரிக்க உறவுகளைப் பற்றியோ மேன்மைப்படுத்தி கூறி, அதன் மூலம் கமலா ஹாரிஸ் ஆதாயம் தேட வில்லை. மாறாக தனது அம்மாவிடமும் தனது மூதாதையர்களிடமும், இந்தியாவில் இருக்கும் தனது உறவினர்களிடமும் தனக்கிருந்த பாசத்தையும் உணர்வுபூர்வமான உறவைப் பற்றியும் மட்டுமே பலமுறை பேசியிருக்கிறார். இது அவரது பெருந்தன்மையான குணம்” என்றார்.
கடந்த ஆகஸ்ட் 2020 இல் நடந்த ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, தன்னைப்பற்றி அமெரிக்கர்களிடம் கமலா ஹாரிஸ் பின்வருமாறு அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் மட்டுமல்ல, இன்னொரு பெண்மணியும் இருக்கிறார். அவரது பெயர் வெளியில் எங்கும் தெரியவில்லை. அவரைப் பற்றிய கதை எங்கும் பகிரப்படவில்லை. அந்தப் பெண்மணியின் தோள்களில் தான் நான் வளர்ந்தேன். அந்தப் பெண்மணி எனது அம்மா சியாமளா கோபாலன் ஹாரிஸ்” என்று பெருமைப்பட கூறியிருக்கிறார்.
அமெரிக்காவிற்குள் குடி புகுவோர் தனது பெயர் அமெரிக்கர்கள் வாயில் நுழையும் படி மாற்றிக் கொள்வார்கள். அல்லது எளிமைப்படுத்திக் கொள்வார்கள். இதற்கு சிறந்த உதாரணம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவரது தாத்தா பிரிட்ஜ் டிரம்ஃப் தனது 16 வயதில் அமெரிக்காவுக்குள் வரும்போது தனது பெயரை, அமெரிக்கர்கள் உச்சரிக்க சிரமப்படுவதை கண்டறிந்து அதை எளிமைப்படுத்தி என்று மாற்றிக் கொண்டார் .
ஆனால், தனது பெயரையோ குடும்ப பெயரையோ, எந்த இடத்திலும் மாற்றியும் மறைத்தும் பேசாத கமலா ஹாரிஸ், அமெரிக்கர்களின் வசதிக்காக தனது பெயரை மாற்றாமல் கம்பீரமாக அமெரிக்கா முழுவதும் பறைசாற்றியிருக்கிறார்.
கமலா ஹாரிஸைப் போலவே வெள்ளை மாளிகையை அலங்கரிக்க போகும் 24 இந்திய வம்சாவளியினரும், தங்களது பெயர்களை முழுமையாக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளனர். இதுவரை அமெரிக்கர்களுக்கு தகுந்தாற்போல தங்கள் பெயர்களை திருத்தி அமைத்துக் கொண்ட காலம் மாறி, இவர்களது பெயர்களை அமெரிக்கர்கள் உச்சரிக்க கற்றுக் கொள்ளும் காலம் வந்துவிட்டது.
2020இல் கமலா உள்பட இந்திய வம்சாவளியினரின் கிண்டல் செய்து அவர்களது பெயர்களை வேண்டுமென்றே தவறாக உச்சரித்து, நையாண்டி செய்தவர்கள் இனி அந்தப் பெயர்களை உச்சரித்து தீரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.