உலக நாடுகளே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு உணவு டெலிவரி நிறுவனத்திற்கு மட்டும் பல நாடுகளில் அனுமதி வழங்கியுள்ளனர்.
அந்த வகையில், கொலம்பியா நாட்டில் உணவு டெலிவரிக்கு அனுமதி இருந்தாலும், டெலிவரி பாய்ஸ் மூலமாக கரோனா பரவ வாய்ப்புள்ளது என்ற அச்சம் நிலவி வந்தது. எனவே, வாடிக்கையாளர் நலனுக்காக சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு, ராப்பி உணவு டெலிவரி நிறுவனம், கிவிபோட் தொழில் நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ஃபுட் டெலிவரி செய்யும் 15 ரோபோட்களை முதற்கட்டமாக உருவாக்கியுள்ளனர்.
ரோபோட் சுமாராக மூன்று முதல் நான்கு அடுக்குமாடிக் கட்டடங்கள் வரை பயணித்து உணவுகளை அளிக்கும் வகையில் தயாரித்துள்ளனர். டெலிவரிக்குச் சென்றுவரும் ரோபோட் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. இதுவரை அந்நாட்டில் கரோனாவால் 4 ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 196ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஊரு விட்டு ஊரு வந்து' ஸ்டைலில் ஒரு கரோனா விழிப்புணர்வுப் பாடல்