அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் கெனோஷா பகுதியில் ஜேக்கப் பிளேக் (29) என்ற கருப்பின நபரை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் அந்நாட்டில் சற்று தனிந்திருந்த போராட்டம் இச்சம்பவத்தால் மீண்டும் வெடித்துள்ளது.
கடந்த மே மாதம் மினியாபொலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கருப்பின நபர் அந்நாட்டு காவல் துறையினரால் கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கருப்பினத்தவருக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற வன்முறைகளை கண்டிக்கும் விதமாக, பெரும் போராட்டம் மக்களால் நடத்தப்பட்டது. தற்போது இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு தொடர் போராட்டத்திற்கு வித்திட்டிருக்கிறது.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக செயல்பட்டு வரும் அதிபர் ட்ரம்ப், தற்போது கெனோஷா பகுதியில் கிட்டதட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களால் தீவிரம் அடைந்த போராட்டக் களத்தை பார்வையிட செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேல்மட்ட அலுவலர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவும் இருக்கிறார்.
வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மற்றொரு கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் ட்ரம்பின் குடியரசு கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்கா டூ துளசேந்திரபுரம்; கமலா ஹாரிஸின் வேர்களை நோக்கிய பயணம் இது!