கரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்த நிலையில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. அமெரிக்காவில் பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பினர் வேலையிழந்தனர். இதற்கிடையே, அவர்களுக்கு 900 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரணமாக வழங்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நிவாரணம் போதுமானதாக இல்லை எனக் கூறி அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்திவிட்டார்.
இந்நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்புக்கு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த மசோதாவால் வேலையை இழந்த 12 மில்லியன் அமெரிக்கர்கள் பயனடையவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயக, குடியரசு கட்சிகள் ஒன்றிணைந்து நிறைவேற்றிய இந்த மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளிக்காததால் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா என்று கூட தெரியவில்லை. இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் அவர் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.