சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று தற்போது உலகிலுள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. உலகெங்கும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 37 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,58,354 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணிகளில் தற்போது உலகிலுள்ள பல்வேறு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருப்பதால் அந்நாட்டின் ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து சோதனையில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசர், தான் உருவாக்கியுள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனையை மனிதர்கள் மீது தொடங்கியுள்ளது. இந்தத் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் ஆய்வில் ஃபைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோன்டெக் எஸ்.இ. என்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறது.
18 முதல் 55 வயது தன்னார்வலர்களிடம் இந்தத் தடுப்பு மருந்து பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் தற்போது நான்கு தன்னார்வலர்களுக்கு மருந்தை அளித்துள்ளதாகவும் மொத்தம் 360 பேரிடம் இந்தத் தடுப்பு மருந்து சோதனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் மீதான சோதனை தொடங்கப்பட்டிருந்தாலும் கோவிட்-19 தடுப்பு மருந்தை அனைவரும் அளிக்கும் வகையில் உற்பத்தி செய்ய குறைந்தது எட்டு மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் ஏற்கனவே இரண்டு வகையான தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டுவருகிறது. அதேபோல பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி நிறுவனமும் மனிதர்கள் மீது தடுப்பு மருந்து சோதனையைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து - இங்கிலாந்து நாளை முதல் மனிதர்கள் மீது சோதனை!