பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் அமெரிக்க பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு மேற்கொண்டார். இரு தலைவர் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதை வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் பெஸ்கி வெளியிட்டார். அந்த அறிக்கையில், "இந்தியா-அமெரிக்க உறவு என்பது தற்போது புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, பெருந்தொற்று உள்ளிட்ட பல விவகாரங்கள் இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பின்போது ஆழமாக பேசப்பட்டது.
இரு தரப்பும் துறை சார் உயர் அலுவலர்களைக் கொண்டு முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சந்திப்புகள் இனிவரும் மாதங்களில் நடைபெறும்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்மையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகனில் உயர் அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அடுத்த வாரம் அமெரிக்க செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நவம்பர் மாதம் வாஷிங்டன் சென்று 2+2 சந்திப்பு மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதிக்குள் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!