அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசர், 524 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருள்களை இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்புகிறது.
இதுகுறித்து பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நிச்சயம் எங்களின் பங்களிப்பு இருக்கும். நிறுவன வரலாற்றில் இல்லாத வகையில், மிகப்பெரிய நிவாரண பொருள்களை வழங்கிட அதை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள விநியோக மையங்களிலிருந்து தேவையான மருத்துவ பொருள்களை அனுப்புதற்கான பணியைத் தொடங்கியுள்ளோம்.
இதன் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகள் பைசர் மருந்துகளை எளிதாகப் பெற்றிட முடியும். சுமார் 70 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 524 கோடி ரூபாய்) மதிப்பிலான மருத்துவ பொருள்கள் உடனடியாக கிடைக்கும்" என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா 2 ஆம் அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.