அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற பெருமை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸுக்கு கிடைத்துள்ளது.
மைக் பென்ஸ், அவரது மனைவி கரேன் பென்ஸ், சர்ஜன் ஜெனரல் ஜெரோம் ஆடம்ஸ் ஆகியோர் தொலைக்காட்சி நேரலையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மக்கள் முன்னிலையில் மைக் பென்ஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என வெள்ளை மாளிகை முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஐசனோவர் நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், மைக் பென்ஸ், கரேன் பென்ஸ், ஜெரோம் ஆடம்ஸ் ஆகியோருக்கு வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தைச் சேர்ந்த மூன்று மருத்துவ அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மைக், "கிறிஸ்துமஸ் விடுமுறை நெருங்கிவரும் நிலையில், அனைவருக்கும் நம்பிக்கைப் பிறந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வாரத்தின் இறுதியில் கூடிய நாம், நம்பிக்கையின் வழியில் பயணித்துவருகிறோம் என அமெரிக்கர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளோம்" என்றார்.
ஆபரேஷன் வார்ப் திட்டத்தின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக மைக் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.