புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டு, பிளாஸ்மாவை (ஊநீர்) தானமாக அளிக்கும் ஒருவரை சந்தித்தபோது அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் முகக்கவசம் அணியாமல் இருக்கும் காணொலிக் காட்சிகள் தற்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவ அறையில் மற்றவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். இதைத்தொடர்ந்து கிளினீக்கில் கரோனா வைரஸ் சோதனைகளை நடத்தும் ஒரு ஆய்வகத்திற்குச் சென்றபோதும் மைக் பென்ஸ் முகக்கவசம் இல்லாமல் இருந்தார்.
அந்த வகையில், மாயோ கிளினீக்கில் கரோனா வைரஸ் சோதனை மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் குறித்த விவாதத்தின் போது முகக்கவசம் அணியாத பங்கேற்பாளராக மைக் பென்ஸ் மட்டுமே இருந்தார்.
இந்நிகழ்வில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஸ்டீபன் ஹான் மற்றும் மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் உட்பட மற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
முன்னதாக முகக்கவசம் அணியும் கொள்கை குறித்து மாயோ கிளினீக்கிலிருந்து துணை அதிபர் பென்ஸூக்கு தெரிவிக்கப்பட்டதாக ட்வீட் செய்யப்பட்டது. பின்னர் அந்த ட்வீட் நீக்கப்பட்டது.
அது ஏன் அகற்றப்பட்டது? அல்லது யாருடைய வேண்டுகோளின் பேரில் இவ்வாறு நடந்தது என்பது குறித்து அலுவலர்கள் பதிலளிக்கவில்லை.
மைக் பென்ஸ் தனக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என அடிக்கடி சோதனை செய்துவருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவின் துணைத் அதிபராக, நான் வழக்கமான அடிப்படையில் கரோனா வைரஸுக்கு சோதிக்கப்படுகிறேன்.
என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சோதனை நடத்தப்படுகிறது. நான் அமெரிக்க மருத்துவ நிறுவன வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறேன். அதன்படி, வைரஸ் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என்பதை அறிவேன்.
எனக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பில்லை. ஆகவே நான் முகக்கவசம் அணியவில்லை. இங்கு வந்ததை நான் நல்வாய்ப்பாக கருதுகிறேன். ஏனெனில் மருத்துவர்களிடம் அவர்களின் கண்களை பார்த்து நன்றி கூறினேன்” என்றார்.
முன்னதாக முகக்கவசம் அணியும் திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நிராகரித்துள்ளார். அமெரிக்கர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் முதலில் பரிந்துரைத்தார்.
அதன்பின்னர், “உடனடியாக அந்த ஆலோசனையை தானே பின்பற்றும் எண்ணம் இல்லை என்று கூறி, 'நான் அதை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்றும் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு மைக் பென்ஸ், வென்டிலேட்டர்களை உருவாக்கும் ஜி.இ. ஹெல்த்கேர் வசதியை பார்வையிட சென்றிருந்தபோதும் முகக்கவசம் அணியாமல் சென்றார்.
இதேபோல் மாடிசனில் நடந்த நிகழ்ச்சியிலும் சிலர் மட்டுமே முகக்கவசங்களை அணிந்திருந்தனர். மற்றவர்கள் அணியவில்லை.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, “மைக் பென்ஸ்க்கு கரோனா பாதிப்பு இல்லை. அதனால் அவர் முகக்கவசம் அணிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உலகில் 31 லட்சம் பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு!