முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா இணையதளம் வாயிலாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "இந்தக் கரோனா வைரஸ் (தீநுண்மி) பல விஷயங்களைக் கிழித்து அப்பட்டமாகக் காட்டிவிட்டது. தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.
ஆனால் அவர்களில் பலர் தாங்கள் பொறுப்பில் இருப்பதுபோல காட்டிக்கொள்ளக்கூட தவறுகிறார்கள். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் எது சரியானது என்று உணர்கிறார்களோ; எது தங்களுக்கு எளிதானது, வசதியானது என்று கருதுகிறார்களோ அதை மட்டுமே செய்கின்றனர். நாட்டில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக அதுவும் ஒரு முக்கியக் காரணம்" என்றார்.
பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக 2009ஆம் ஆண்டுமுதல் 2017ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அதிபரான அவர் மீது ட்ரம்ப் அரசு தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருகிறது. இருப்பினும் ஒபாமா அவற்றுக்குப் பதில் அளித்ததில்லை. இந்நிலையில், அதிபர் ட்ரம்பை மறைமுகமாகத் தாக்கி பேசியுள்ள ஒபாமாவின் இந்தப் பேச்சு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனா காலத்தில் நம் சமூகத்தில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஜார்ஜியா மாகாணத்தில் ஜாங்கிங் சென்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை யாரோ ஒருவர் நிறுத்தி கேள்வி கேட்கிறார். அதற்கு விடை தர மறுத்ததற்கு அவர் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
இதுபோல ஆப்பிரிக்கா அமெரிக்கர்களுக்கு எதிராக அநீதிகள் நடைபெறுவது இது புதிதல்ல. ஆனால், இங்குள்ள நிலைமை தவறாக உள்ளது. அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்று அடுத்த தலைமுறையில் பெரும்பாலானோர் உணரத் தொடங்கிவிட்டனர்" என்றார்.
இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா ஆட்சியின்போது துணை அதிபராக இருந்த ஜோ பிடன் ட்ரம்புக்கு எதிராகக் களமிறங்கவுள்ளார். ஜோ பிடனுக்கு தனது முழு ஆதரவையும் ஒபாமா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!