அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் நடு ரோட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கரான கால்பந்து வீரர் ஜார்ஜ் ஃப்ளாய்டை, மினியாபோலிஸ் நகரின் காவலர் ஒருவர், மூச்சுவிட முடியாத வகையில் நீண்ட நேரமாகப் பிடித்து வைத்து துன்புறுத்தியுள்ளார். காவலரின் கோரப்பிடியில் சிக்கிய ஃப்ளாய்ட் சுயநினைவை இழந்தார்.
அவசர உதவிக் குழு வந்து, அவரை மீட்கும் வரை, தனது பிடியைக் காவலர் விலக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் அவரைப் பரிசோதித்தபோது, ஃப்ளாய்ட் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. இதனைக் கண்டித்து அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த இனவெறி தாக்குதலை பல்வேறு தரப்பினர் கண்டித்துவருகின்றனர். ப்ளாய்ட் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சத்யா நாதெள்ளா, சமூகத்தில் வெறுப்புணர்வு இனவாதத்திற்கு இடமில்லை எனக் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது தொடக்கம் மட்டுமே. ஆனால், இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சமூகத்தில் வெறுப்புணர்வு இனவாதத்திற்கு இடமில்லை. கறுப்பின, ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன். இதனை என் நிறுவனத்திலும் சமூகத்திலும் தொடர உறுதியாக உள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: போராட்டத் தீயை பற்ற வைத்த ஃப்ளாய்ட்!