நியூயார்க்: கடந்த வெள்ளிக்கிழமை (அக்.23) பஞ்சாப் மக்களின் வரலாற்றில் முக்கியமான நாளாக மாறியுள்ளது. நியூயார்க் நகரில் மிகவும் பரபரப்பான இயங்கிவரும் சாலை ஒன்றுக்கு ’பஞ்சாப் அவென்யு’ எனப் பெயரிட்டு அச்சமூகத்தினரை கௌரவப்படுத்தியுள்ளது நியூயார்க் நிர்வாகம்.
இந்த அவென்யூவானது, 101 அவென்யூவில் தொடங்கி, 111ஆவது தெரு முதல் 123ஆவது தெரு வரை இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பஞ்சாப் மக்கள் அதிக அளவு வசிப்பது மட்டுமல்லாமல், தெரு நெடுகிலும் அவர்கள் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளனர் என்கிறார் அப்பகுதியின் கவுன்சில் உறுப்பினர் அட்ரியன் ஆடம்ஸ்.
இந்தப் பெயர்மாற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் முக்கிய செய்தி நிறுவனங்கள் பலவும் கலந்துகொண்டன. அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலப் பத்திரிகைகளுக்கும், பஞ்சாப் பத்திரிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அட்ரியன் ஆடம்ஸ், "கடின உழைப்பாளிகளில் சிலர் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மிக நீண்ட காலமாக இங்கு வசித்து வந்துள்ளனர்" என்றார்.
சீக்கிய கலாச்சார சங்கத்தின் முன்னாள் தலைவர், பஞ்சாப் மக்கள் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.