கடந்த செவ்வாய்கிழமையன்று ப்ரார்ட் கவுண்டி பகுதியில் சாலையின் மையத்தில் புதைகுழி ஒன்று திடீரென உருவாகி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேரில் சென்று பார்வையிட்டபோது, அது புதைகுழி அல்ல சுரங்கபாதை என்றும் தெரியவந்துள்ளது. கவுண்டி அதிகாரிகள் குழிக்குள் ஆய்வு செய்த போது மின் இணைப்புகளும், வயர்களும் இருப்பதை கண்டுபிடித்தனர். 2-ல் இருந்து 4 அடி அகலத்திலும் 45 மீட்டர் நீளத்திலும் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த சுரங்கபாதை எங்கு இருந்து தொடங்குகிறது என்பது தெரியவில்லை என்ற போதும் ஒரு வங்கியின் கிளை அலுவலகத்தின் அருகில் சென்று அது முடிவதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், வங்கியில் கொள்ளை ஏதும் நடைபெறவில்லை எனவும் வங்கியின் மேலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து எஃப்.பி.ஐ சிறப்பு அதிகாரி மைக்கேல் லெவராக், இந்த சுரங்கப்பாதை சினிமா காட்சிகளில் வருவது போன்று வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் இந்த செயலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்றும், இந்த சுரங்கப்பாதை எப்போது தோண்டப்பட்டது என்றும் தெரியவில்லை எனக் கூறினார். மேலும் வங்கி கொள்ளைக்கு திட்டமிட இந்த சுரங்கப்பாதை தோண்டப்பட்டதா என்ற ரீதியிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.