பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் நடைபெற்ற 11ஆவது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு, பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான உத்திகள் குறித்து விவாதித்ததுடன், வர்த்தகம், நிதி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தியது. சம வாய்ப்புகள் கொண்ட ஒரு உலகத்தை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த பிரிக்ஸ் அமைப்பு, அதன் முன்னேற்றப் பாதையில் உள்ள தடைகளை சரியாக அடையாளம் கண்டுள்ளது.
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து முக்கிய நாடுகள் இணைந்த கூட்டமைப்பின் சுருக்கமாகும். அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.5 விழுக்காடு குறைக்கக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) எச்சரித்தது, இது தென் ஆப்பிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும்.
உலக பொருளாதாரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து பிரிக்ஸ் தலைவர்கள் விவாதித்தனர். அப்போது, "பயங்கரவாதத்தால் உலகப் பொருளாதாரம் கோடிக்கணக்கான டாலர்களை இழந்துள்ளது. உலகளவில் 2.25 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்" என நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஏழு வாரங்களுக்கு முன்பு, ஐநா பொதுக்கூட்டத்துக்கிடையே நியூயார்க் நகரில் சந்தித்துப் பேசிய பிரிக்ஸ் தலைவர்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான உத்திகளைச் செயல்படுத்த முடிவு செய்தனர். இதன் விளைவாக, ரசாயன ஆயுதங்களைத் தடை செய்வது உள்பட அனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஆதரவை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்க தவறிய பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் சில நாள்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டன.
செயல்முறை சிக்கல்களை உருவாக்கி பாகிஸ்தானை மீட்க சீனா வரும்போது, பயங்கரவாத எதிர்ப்பு உத்திகள் செயலிழக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பு, இணக்கத்தன்மை ஆகியவற்றின் அளவு கேள்விக்குறியாகியுள்ளது. பிரிக்ஸ் நாடுகளிடையே வர்த்தகத்தின் அளவு உலக சந்தையில் 15 விழுக்காடு மட்டுமே என மோடி தனது உரையில் வெளிப்படுத்தி இருந்தார். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதமும், உலக மக்கள் தொகையில் 42 சதவீதமும் கொண்ட பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். கடந்த காலத்தில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனியுடன் சவால்விட்டு அமெரிக்கா, ஜப்பானுடன் பிரிக்ஸ் நாடுகள் உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் என்று மதிப்பீடுகள் இருந்தன.
எரிபொருள், உணவுப் பாதுகாப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது, சர்வதேச நிறுவனங்கள் ஒன்றுபட்டு போராடினால் அவற்றைச் செயல்படுத்துவதில் வெற்றி பெரும். பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, யூரேசியா பொருளாதார ஒன்றியம் ஆகியவை இணைந்து ஒரு மல்டிபோலார் (பன்முனை) உலகத்தை நிறுவ முடியும் என்று சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் கூறினார் .
இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கு உள்ள ஏராளமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரதமர் மோடி உறுப்பு நாடுகளை அழைத்தார். சர்வதேச வர்த்தக குறியீட்டில் இந்தியாவும் பிரேசிலும் கடைசி இடத்தில் இருந்தன. அடிப்படை உள்கட்டமைப்பு , மின்சாரம், விநியோக சங்கிலி ஆகியவற்றில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் முதலீடுகளை ஈர்க்கும்.
தென் ஆப்பிரிக்கா சேர்வதற்கு முன்னர் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளாக இருந்த பிரிக் (BRIC) உலகளாவிய பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதிலும், நிதி நிறுவனங்களைச் சீர்திருத்துவதிலும் கவனம் செலுத்தியது. ஆனால், இதுவரை மிஞ்சியது அவநம்பிக்கைகளே.
அதனால் தான், ஐநா சபை, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை சீர்திருத்துவதை மையமாக் கொண்டு இந்த ஆண்டின் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்றது. ஐநா அமைப்பில் ( UNO) முறையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற இந்தியாவின் நிலைபாட்டை இது தெளிவுபடுத்துகிறது. பிரிக்ஸ் உச்சிமாநாடு இந்த கருத்தை உறுதிப்படுத்தியதுடன், உலக வணிக அமைப்பு, சர்வதேச நாணய நிதியத்திலும் இதே போன்ற கொள்கை மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் எனவும் இந்தியா கோரிக்கை விடுத்தது.
குழுவாக இருந்தாலும் சரி, தனி தேசமாகவும் சரி இந்தியாவுக்குப் பொருந்தாத நாடு சீனா தான். ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் யோசனையை சீனா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றாவிட்டால், பிரிக்ஸ் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது.
பாதுகாப்புச் சபையில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர நிரந்தர உறுப்பு நாடுகள் சம்மதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் கூறுகிறது. வேறு சொற்களில் கூறுவதானால், பிரிக்ஸ் கோரிக்கைகளுக்கு முக்கிய தடையாக இருப்பது சீனா தான். புவியியல், கருத்து வேறுபாடுகளைக் கடந்து கைகோர்த்துள்ள பிரிக்கஸ் நாடுகள், ஒரு செல்வாக்குமிக்க சக்தியாக மாற முதலில் தங்களுக்குள் உள்ள மோதல்களைத் தீர்க்க வேண்டும்.
இதையும் படிங்க : பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சியும்... ஆதிக்கமும்...!