வாஷிங்டன் (அமெரிக்கா): இரண்டாவது தாய் என்று செல்லமாக அழைக்கும் ரெஜினா ஷெல்டன் கொடுத்த பைபிளை வைத்து, அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார்.
ரெஜினா ஷெல்டன் என்பவர் கமலா ஹாரிஸ் சிறுமியாக இருந்தபோது அவரது வீட்டிலிருந்து 2 வீடு தள்ளி வசித்து வந்துள்ளார். கமலாவின் தாயார் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர் என்பதால் பணி நேரம் முடிந்து சரியான நேரத்தில் வீடு திரும்புவது என்பது முடியாத காரியம்.
இவ்வேளையில் பள்ளிக் கூடம் முடிந்ததும் நேராக ரெஜினா வீட்டுக்குத்தான் கமலாவும், அவரது சகோதரி மாயாவும் செல்வார்கள். அம்மா திரும்பி வரும்வரை அவர்களுக்கு ரெஜினாதான் அவர்களை கவனித்துக்கொள்வார். பசியாற சாப்பாடு போடுவது, கதை சொல்வது, பள்ளிக்கூட கதைகளைக் கேட்பது என்று ரெஜினா ஒரு தாயாக மாறி இரு குழந்தைகளையும் அப்படி பாசத்தோடு பார்த்துக் கொள்வாராம்.
இதை பலமுறை சொல்லி மகிழ்ந்துள்ள கமலா, ரெஜினாவை தனது 2ஆவது தாய் என்றே பூரிப்புடன் சொல்லி மகிழ்வார். அந்த 2ஆவது தாயின் பைபிளை வைத்துத்தான் துணை அதிபர் பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்தார். இது தனது 2ஆவது தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடனாகவும், கடமையாகவும் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
தனது உயர்வில் தாயாருக்கு என்ன பங்கு இருந்ததோ அதே அளவிலான பங்கு ரெஜினாவுக்கும் உண்டு என்று பெருமையுடன் கூறுபவர் கமலா. கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக முன்பு பதவியேற்றபோதும்கூட ரெஜினாவின் பைபிளை வைத்துதான் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதேபோல செனட் உறுப்பினராக வந்தபோதும் இதையேதான் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா ஹாரிஸ் பயன்படுத்திய 2ஆவது பைபிள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி துர்குட் மார்ஷல் என்பவரின் பைபிளாகும். இவர் மறைந்த சிவில் உரிமைப் போராளி ஆவார்.