அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ், நாட்டில் நிலவும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மதத் தலைவர்களுடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தார். இதில், நான்கு மதத் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டனர். மேலும், ஐவர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர். சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், "கடினமான சூழ்நிலைகளில் மக்களுக்கு ஆலோசனை அளித்தவர்களாகத் திகழ்ந்தவர்கள் மதத் தலைவர்கள். பெரும் இழப்பைச் சந்தித்த மக்கள், நிச்சயம் அவர்களின் கஷ்டத்தை உங்களுடன் பகிர்ந்திருப்பார்கள்.
மக்களின் நம்பிக்கை தலைவர்களாக விளங்கும் நீங்கள், வீடற்றவர்களுக்கு வீட்டு வசதி செய்துதருகின்றீர்கள்; மக்களின் பசியைப் போக்குகின்றீர்கள். எனவே, மக்கள் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நீங்கள்தான், கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைத்துவிட்டதா என்பதை உறுதிசெய்யவும் உதவ வேண்டும். மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியேற காரணமான சில மூல காரணங்களை நிவர்த்திசெய்ய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த யோசனைகளும் அனுபவமும் உங்களிடம் உள்ளது. அதை எங்களுடன் பகிர்ந்து, மக்களின் குறைகளைத் தீர்க்க உதவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானின் அமைதி ஆசியாவுக்கு முக்கியம்: அமைச்சர் ஜெய்சங்கர்