இந்த முயற்சி 'சலோகிவ் ஃபார் கோவிட் -19' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப இலக்கான 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய புலம்பெயர்ந்தோரின் ஆதரவோடு வெறும் பத்து நாள்களில் அது அடைந்துள்ளதாக அமெரிக்க பஜார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிதி அமெரிக்காவில் ஃபீடிங் அமெரிக்கா என்ற அமைப்பிற்கும், இந்தியாவில் கூன்ஜ் என்ற அமைப்பிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாஸ்போராவின் முன்முயற்சியின் மூலம் நிதியைப் பெற்றுள்ள ஃபீடிங் அமெரிக்கா, அமெரிக்காவில் 4.7 மில்லியன் மக்களின் உணவை உறுதி செய்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு அமெரிக்க டாலர் பங்களிப்பும் 200 உணவு வங்கிகளின் அமைப்பின் நெட்வொர்க் வழியாக 10 பேரின் உணவை உத்தரவாதப்படுத்துகிறது என்று தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முழுமையான ஊரடங்கால் இந்தியாவில் பதினெட்டு மாநிலங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள், சுகாதார கருவிகளை வழங்க இந்த நிதியை கூஞ்ச் அமைப்புப் பயன்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் மூலம் இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க வினையாற்றி வருகிறது என இந்தியாஸ்போரா அறிக்கை புள்ளிவிவரங்களோடு குறிப்பிட்டுள்ளது. கூன்ஜுக்கு பங்களித்த 20 அமெரிக்க டாலர்கள், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஏழு முதல் 10 நாள்களுக்கு தேவையான உணவை அளிக்கிறது.
இந்தியாஸ்போராவின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ஜோஷிபுரா, “இந்த நெருக்கடியின் போது நமது சமூகத்திற்கு உதவி செய்யும் ஒரு பெரிய விருப்பம் மக்கள் இடையே இருந்தது. அதனை உணர்ந்த நாங்கள் உதவிகளை வழங்க ஒரு எளிமையான வழியை வழங்கினோம். இந்திய புலம்பெயர்ந்தோர் ஓடி வந்து நின்று இறுதி நேரம் வரை உதவினர்” என இந்திய புலம்பெயர்ந்தோரின் உதவியை நினைவு கூறுகிறார்.
இந்த முயற்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு கடல் தாண்டிய தன்னார்வ குழுவான அறம் செய் அமைப்பிடமிருந்து வந்தது. கல்வி, சுகாதாரம் ஆகிய இரு துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் உலகளவில் அடிமட்ட தொண்டு நிறுவனங்களை ஆதரித்து பணிகளை மேற்கொள்வதை பயண இலக்காக கொண்ட அறம் செய் இந்த கோவிட்-19 பேரிடருக்கு எதிரான பணியில் மும்முரமாக செயலாற்றியது.
பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவை வழிநடத்தும் அறம் செய் அமைப்பின் தலைவரும் நிறுவனருமான சங்கீதா லட்சுமிநாராயணன் கூறுகையில், ”பேரிடரில் உதவும் 'சலோகிவ் ஃபார் கோவிட் -19' நிதி திரட்டும் முயற்சியை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். நாம் பிறந்த நாட்டிலும், நாம் வாழும் நாட்டிலும் ஒரு பேரிடர் ஏற்பட்டிருக்கும் போது அதனை எதிர்கொள்ள நம் மக்களுக்கு உதவ, உலகையே நம் வீடாக மாற்றிய கரோனா வைரஸ் பரவலில் அதனை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ முடிந்தது அதிர்ஷ்டம் என்று நாங்கள் நினைக்கிறோம்.” என பெருமை பொங்க கூறுகிறார்.
இதையும் படிங்க : தளர்த்தப்படும் ஊரடங்கு - தரவுகள் கூறுவது என்ன?