கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மேஜை விழுந்ததில் ஜோசப் டீயூக் என்ற இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. 32 கிலோ எடையுள்ள அந்த மேஜை, ஐகியா என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக, குழந்தையின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில், 46 மில்லியன் டாலரை இழப்பீடாக வழங்க ஐகியா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே குழந்தை உயிரிழந்ததற்கு வழங்கப்படும் மிகப் பெரிய இழப்பீடு இது என்று அமெரிக்க சட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
"இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு எந்தவொரு இழப்பீடு வழங்கியும் ஈடு செய்ய முடியாது என்று எங்களுக்கு தெரியும். இருந்தபோதும், இந்தப் பிரச்னையை முடித்து வைத்ததற்கு அந்த குடும்பத்திற்கு நன்றி. மேலும், வீட்டிலுள்ளவர்களின் பாதுகாப்பில் நேரடியாக தொடர்புடைய இதுபோன்ற விபத்துகள் குறித்து விசாரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" ஐகியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேபோல, மூன்று விபத்துகள் ஐகியா மேஜைகளால் அமெரிக்காவில் நிகழ்ந்தது. இதையடுத்து, விற்கப்பட்ட அந்த மாடல் மேஜைகளை எல்லாம் ஐகியா நிறுவனம் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களைக் கலக்கிய 'பக்' நாயின் எம்ஆர்ஐ ஸ்கேன்