அமெரிக்காவின் 42ஆவது அதிபராக பதவி வகித்தவர் பில் கிளிண்டன். இவர், 1993ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். இவர் ஆட்சியாளராக இருந்த போது, வெள்ளை மாளிகையில் பணிபுரிந்தவர் மோனிகா லெவின்ஸ்கி.
இவர் 1995ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். அப்போது மோனிகாவுக்கு வயது 20. கிளிண்டனுக்கு வயது 50. அப்போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றியதாக பரபரப்பான செய்திகள் வெளியாகின. அலுவலக ஊழியர், அந்தரங்கப் பணியாளர் ஆனக் கதை” என்ற தலைப்பில் விவாதங்கள் கூட நடந்தன.
இந்தப் புயல் அமெரிக்காவை மட்டுமின்றி கிளிண்டன் வீட்டையும் பதம் பார்த்தது. எனினும் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, தனது கணவரை முழுமையாக நம்பினார். அதன் பின்னர் ஹிலாரிக்கு உண்மை புரியவந்தது.
இதனால் மனம் வெதும்பினார். ஹிலாரியை கிளிண்டன் தேற்றினார். எனினும், இவ்விவகாரம் தொடர்பாக கிளிண்டன் பொதுவெளியில் பெரிதளவில் விளக்கம் கொடுத்தது கிடையாது. ஆகவே இந்த காதல் கதை 'நீறு பூத்த நெருப்பாக' அவ்வப்போது தேர்தல் நேரத்தில் வந்து மறையும்.
இந்த நிலையில் திருமணத்தைத் தாண்டிய உறவு தொடர்பான ஆவணத் தொடர் ஒன்றுக்கு பில் கிளிண்டன் அளித்துள்ள பேட்டியில், தனது முன்னாள் காதலி குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “15 சுற்றில் (ரவுண்ட்) முடிய வேண்டிய குத்துச் சண்டை போட்டி, 30 சுற்று தொடர்ந்தால் ஒரு வீரனின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அப்போதுள்ள களைப்பான சூழலில் மனம் அமைதியைத் தேடும் அல்லவா? அதுபோல்தான் அது நடந்தது.
எனது பிரச்னைகளுக்கு மத்தியில் மன ஆறுதல் கொடுத்தது. ஆனால், அது மோசமான தவறென்பதை உணர்ந்தேன். அவளுடன் படுக்கையில் உட்கார்ந்து பேசினேன். அதன் தாக்கம் என்னை வெகுவாக பாதித்தது. நான் பாதுகாப்பற்றவனாக உணர்ந்தேன். அச்சூழல் எனக்குப் பயத்தை கொடுத்தது. இது பற்றி ஹிலாரியிடம் கூறினேன். அவள் அதிர்ந்தாள். நான் செய்த தவறை என்னால் மன்னிக்க முடியாது என்றார்.
இது பற்றி ஹிலாரி கூறுகையில், “அவர் (பில் கிளிண்டன்) பல நேரங்களில் உணர்ச்சி மிகுந்து காணப்பட்டார். நான் தனிப்பட்ட முறையில் காயப்பட்டேன். என்னால் அதனை நம்ப முடியவில்லை. பேரழிவுக்கு உள்ளானேன்” என்றார்.
மேலும் இது குறித்து மகள் செல்சியாவிடமும் நீங்களே கூறிவிடுங்கள் என்று ஹிலாரி கூற, கிளிண்டன் ஒரு கணம் மூர்ச்சை நிலைக்குச் சென்று திரும்பியுள்ளார். இது குறித்து பில் கிளிண்டன், “தாம் பரிதாபமாக உணர்ந்ததாக கூறினார்.
மோனிகா- பில் கிளிண்டன் இடையே நிகழ்ந்த அந்த உணர்ச்சிமிகு தருணங்கள் அமெரிக்க அரசியலில் பெரும் புயலாக வெடித்தது. கிளிண்டன் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக கிளிண்டன் சட்டச் சிக்கலையும் சந்தித்தார். எனினும் மனம் தளராது நகர்ந்து கொண்டே இருந்தார். இரண்டாம் முறையாகவும் அரசியலில் வெற்றிப்பெற்றார். அப்போதும் கிளிண்டன்-மோனிகா திருமணத்தைத் தாண்டிய உறவு எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
அமெரிக்காவை பொறுத்தமட்டில் இது அரசியல் சார்ந்து எதிரொலிக்கிறது. 2014ஆம் ஆண்டு (அதிபர் தேர்தலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர்) இந்த விவகாரம் ஊடகங்களில் மீண்டும் பெரிதாக்கப்பட்டது. அதற்கு மோனிகாவின் சூடான பேட்டியே காரணம்.
இது குறித்து மறைமுகமாக பேசிய மோனிகா, “நான் 22 வயதான போது எனது முதலாளியை காதலித்தேன். அன்று பேரின்பம் கொடுத்த அந்த நினைவுகள், தற்போது என் வாழ்நாளில் தீராதத் துன்பத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நான் அரசியல் ரிதீயாக தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுவருகிறேன்” என்றார்.
மோனிகாவின் இந்தப் பேட்டி ஹிலாரியின் அதிபர் கனவுக்கு வேட்டுவைத்தது. மோனிகா, எதிர்க்கட்சிக்கு (டொனால்ட் ட்ரம்ப்) ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றஞ்சாட்டுகள் எழுந்த போதிலும், அது ட்ரம்பின் வெற்றியைப் பாதிக்கவில்லை. மாறாக அவரது வெற்றிக்கு உரமிட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: தொட்ட... கெட்ட...! - பெண்கள் பாதுகாப்பில் அசத்தும் ஆந்திரா!