அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சமீபத்திய ஹெச் - 1பி விசா தடை எதிரொலியாக, உலகளவில் பல்வேறு விசாக்கள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இந்த விதிமுறைகள் அமெரிக்காவுக்கு வெளியில் இருப்பவர்களுக்கும், குடியேற்றம் அல்லாத செல்லுபடியாகும் விசா மற்றும் அலுவலக பயண ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் வைத்துள்ளவர்கள் மற்றும் தங்கள் பாஸ்போர்ட்டில் அலுவலக விசா ஸ்டாம்ப் இடுபவர்களுக்கு இந்த விதிகளில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விரிவாகக் காணலாம்:
ஹெச் - 1பி விசா வைத்திருப்பவர்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களால் சிறப்பு தகுதி அடிப்படையில் பணி அமர்த்தப்படுபவர்கள் இந்த ஹெச் - 1பி விசா வைத்திருப்பார்கள். இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவின் 2021ஆம் நிதியாண்டு தொடங்குகிறது, எனவே இந்தியாவிலிருந்து பல நிறுவனங்கள் ஹெச் - 1பி விசாக்கள் அளித்துள்ளனர். அமெரிக்காவின் விசா தடைக்காலம் மேலும் நீட்டிக்கப்படவில்லை எனில், இந்த வகை விசா பெற்ற பணியாளர்கள் இந்தாண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் தான் அவர்களுக்கு பயண ஆவணங்கள் கிடைத்து, அமெரிக்கா செல்ல முடியும்.
தங்கள் விசா நிலையை மாற்ற விரும்பும் மாணவர்கள்
இந்த விசா தடை உத்தரவு ஏற்கனவே அமெரிக்காவில் செல்லுபடியாகும் ஆவணங்கள் வைத்திருப்போரை பாதிக்காது. ஆப்ஷனல் ப்ராக்டிகல் ட்ரெயினிங் (ஓபிடி) பிரிவின் கீழ் அமெரிக்காவில் தற்போது படிப்பிற்காக தங்கியிருந்து, தங்கள் விசா நிலையை ஹெச் - 1பி -க்கு மாற்ற விரும்பும் மாணவர்களை இந்த உத்தரவு பாதிக்காது. ஆயினும், இந்த மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறக்கூடாது, அப்படி வெளியேறினால், மீண்டும் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல சிக்கல் ஏற்படும். புதிய விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கும்.
ஹெச்-2 பி விசா
வேளாண்துறை சாராத தற்காலிக பணியாளர்களுக்கான விசா இது. அதிகபட்சம் 66 ஆயிரம் பேருக்கு இந்த விசா ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த ஆண்டில் விதிக்கப்பட்ட சமீபத்திய கட்டுப்பாடுகளின் படி, உணவு உற்பத்தி மற்றும் ஹோட்டல்களில் பணியாற்ற விரும்பும் தொழிலாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.
ஹெச்- 4 விசா
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் ஹெட்1-பி விசா வைத்திருப்பர்களின் மனைவி அல்லது அவரது குழந்தைகள் மற்றும் அவரை சார்ந்திருப்பவர்களுக்கான விசா இது. ஜே-1 விசாக்கள், ஜே-2 விசாக்களை அடுத்து, ஜே-1 விசா வைத்திருப்பவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் மற்றும் எல்-1 விசா வைத்திருப்பவர்களின் சார்பாளர்களுக்கு அளிக்கப்படும் எல்-2 விசா ஆகியவை அனைத்தும், புதிய விதிமுறைகளின் கீழ் கொண்டு வரப்படும்.
எல்- 1 விசா
நிறுவனத்திற்குள் இடமாற்றம் செய்யப்படுபவர்களுக்காக எல்-1 வகை விசாக்கள் வழங்கப்படும். தற்போது வெளியிடப்பட்ட உத்தரவின் படி, வெளிநாட்டில் இருக்கும் பணியாளர்கள், அமெரிக்காவில் உள்ள தங்கள் நிறுவனத்திற்கு செல்ல இயலாது.
கரோனா தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கையால், அமெரிக்கர்களுக்கு 5,25,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இந்த உத்தரவிற்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்பட பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்திய-அமெரிக்க சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, விசாக்களை ரத்து செய்யும் இந்த உத்தரவை ட்ரம்ப் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த உத்தரவால் கரோனாவுக்கு பிறகு பொருளாதார பின்னடைவை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை செயல்படுத்தாமல், நடப்பு சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாற்றம் செய்யலாம் என்று அமெரிக்காவின் மூத்த செனட்டர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கடினம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியர்களுக்கு பதிலாக அமெரிக்கர்களை பணியமர்த்துவதால் பொருளாதார அடிப்படையில் தங்களுக்கு சுமை ஏற்படும் என்று அமெரிக்க நிறுவனங்களும் கவலை கொண்டுள்ளன.
அமெரிக்க வாழ் தெலுங்கு பேசும் மக்களுக்கு பாதிப்புகள்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையால் தெலுங்கு பேசும் மாநிலங்களில் வசிக்கும் இளைஞர்கள் குழப்பமடைந்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு திரும்பிய அமெரிக்க வாழ் தெலுங்கர்கள், தற்போது விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளால் மீண்டும் அமெரிக்கா திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யுமளவுக்கு அமெரிக்கர்களுக்கு திறன் மற்றும் நுட்பங்கள் போதாது என்று அலுவலர்களே தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சொல்வதானால் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டினருக்கு மாற்றாக அமெரிக்க பணியாளர்களில் 29 விழுக்காடு மட்டுமே நிரப்ப முடியும், மீதமுள்ளவை இந்தியர்களால் மட்டுமே நிரப்ப முடியும் என்று தெரிவிக்கின்றனர். அதிபரின் தற்போதைய முடிவால் பல்வேறு புராஜெக்ட்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று, அமெரிக்க வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
லாட்டரியில் வெற்றி பெற்ற 25 ஆயிரம் பேர் ஏமாற்றம்
ஆண்டுதோறும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைத் தேடும் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக லாட்டரி முறை நடத்தப்படும். லாட்டரியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் விசா செயலாக்கப்படும். இந்த ஆண்டுக்கான லாட்டரி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் முடிந்தது. இந்த லாட்டரியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்னும் நான்கரை மாதங்களில் அமெரிக்கா செல்ல வேண்டும். ஆயினும் கரோனாவின் கோரமான தாக்குதல்களால் இவர்களது அமெரிக்க பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
லாட்டரியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விசா வழங்கும் செயலாக்கத்தின் போது, நோய்த்தொற்று காரணமாக உலக நாடுகளில் உள்ள தங்களது தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது. இதனால் அனைவரது விசா ஆவணங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது, இந்தியாவிலுள்ள இரண்டு தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான். மொத்தம் 25 ஆயிரம் பேர் லாட்டரியில் தேர்வு செய்யப்பட்ட போதும், அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான லாட்டரி செயலாக்கம் கரோனாவால் முடக்கப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு நடக்கும் லாட்டரி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் விசா ஆலோசகர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாட்டரியில் தேர்வாகி அமெரிக்கா செல்லும் கனவு நனவானதால் மகிழ்ச்சியில் இருந்த இளைஞர்கள், தற்போது தங்களுக்கான அமெரிக்க கதவுகள் மூடப்பட்டு விட்டதால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்த ஆண்டு மீண்டும் நடக்கும் லாட்டரியில் இந்த 25ஆயிரம் பேருக்கும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே மீண்டும் தேர்வாக முடியும் என்று, அமெரிக்காவின் சட்ட நிபுணர் ஈநாடு பத்திரிகையிடம் தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழலில் தங்கள் ஹெச்1-பி விசா நீட்டிப்புக்காக இந்தியா வந்தவர்கள், அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் வேலைக்காக அமெரிக்காவுக்கு திரும்ப முடியாது என்று, ஐஎம்எஃப்எஸ் நிறுவனத்தின் பிரதிநிதி அஜய்குமார் வேமுலபட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண்க - பிரிட்டன் பிரதமர்