அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட உள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக இத்தேர்தல் முற்றிலும் தபால் மூலம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், முற்றிலும் தபால் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றால் மோசடி நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், அதைத் தடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
கரோனா பரவல் காரணமாக, அமெரிக்க தபால் துறை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக தபால்கள் சரியான நேரத்தில் சென்று சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் 46 மாகாணங்களில் தபால் வாக்குகள் சரியான நேரத்தில் சென்றடைவதில் தாமதம் ஏற்படும் என்றும் அமெரிக்க தபால் துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தபால் துறையை மீட்கும் வகையில் அத்துறைக்கு 25 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யும் மசோதாவை ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்தனர்.
இது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர், ஜனநாயகப் பிரதிநிதி கரோலின் மலோனி, "நமது தபால் துறை குழப்பமடைவதை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. இது அரசியல்மயமாக்கப்படுவதையும் அவர்கள் நிச்சயமாக விரும்பவில்லை. தங்கள் தபால் சரியான நேரத்தில் சென்று சேருவதையே அவர்கள் விரும்புகிறார்கள். எங்கள் மசோதா அதைத்தான் செய்கிறது" என்றார்.
குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், இது ஒரு தேவையற்ற மசோதா என்றும், தபால் துறைக்கு ஏற்கனவே போதிய நிதி அளிக்கப்பட்டு வருவதால் அத்துறை எவ்வித நெருக்கடியிலும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
குடியரசுக் கட்சியனர் இந்த மசோதாவில் வாக்களிக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இருப்பினும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும், குடியரசுக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான நான்சி பெலோசி, "அதிபர் என்ன சொல்கிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டாம், ஏனென்றால் அவை வாக்குப் பதிவை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்" என்றார்.
இந்த மசோதா குறித்து நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, 26 குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தனர். இதனால் இந்த மாசோதாவுக்கு ஆதரவாக 257 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பதிவாகின.
இந்த மசாதோ தற்போது நிறைவேறியுள்ளதால் தபால் துறைக்கு 25 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் கரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தபால் துறை மீள முடியும்.
இருப்பினும், இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ள வெள்ளை மாளிகை மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகம், அதிபரின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மசோதாவை ரத்து செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க: கமலா ஹாரிஸ் உச்சரித்த 'சித்தி' - அர்த்தம் புரியாமல் கூகுளிடம் கேட்ட அமெரிக்கர்கள்