மனிதன் நாகரிக வளர்ச்சியடைய பல்லாயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டபோதும், சில ஆண்டுகளிலேயே தொழில்நுட்ப வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக இருந்தவை கணினி, செல்ஃபோன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களே. அதையும் மீறி இன்று தகவல் பரிமாற்றத்திற்கும், தேடலுக்கும் முக்கிய வழிகாட்டியாக இருப்பது கூகுள் தேடுபொறி.
இன்று மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமாக இருக்கும் கூகுளை இரண்டு பட்டதாரி மாணவர்கள், ஒரு சிறு அறையில் இருந்துக்கொண்டே உருவாக்கினார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உருவாக்கினார்கள். லேரி பேஜ், செர்ஜி பிரின் என்னும் கணினி அறிவியல் பயின்ற பட்டதாரிகள்தான் கூகுளை உருவாக்கினார்கள். ஆரம்ப காலத்தில் இது 'பேக்ரப்' என பெயரிடப்பட்டிருந்தது. பின்னாளில் இதுவே கூகுளாக மாற வித்தானது. இன்று தனது 21ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள், அதை தனது டூடுல் மூலம் வெளியிட்டுள்ளது. அதில் பழைய மாடல் கணினியில், கூகுள் தேடுபொறியின் புகைப்படமும், அதனருகே கூகுள் தோன்றிய தினமான 27.9.98 என்ற தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறிது மாற்றங்கள் செய்த பிறகே கூகுள் பிரபலமாக மாறியது. பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் என்னும் நிறுவனம் கூகுளுக்கு நிதி ஒதுக்கி, கலிஃபோர்னியாவில் முதல் முறையாக சட்டப்பூர்வமாக கூகுள் நிறுவனம் தனது அலுவலகத்தைத் தொடங்கியது.
பின் 2001ஆம் ஆண்டு தொழில்நுட்பத்துக்காக காப்புரிமை பெற்று லேரி பேஜை கண்டுபிடிப்பாளராக அறிவித்தது கூகுள் நிறுவனம். ஆண்டுகள் கடந்து ஜி மெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் ஷீட்ஸ், கூகுள் டிரைவ் என கூகுளின் தயாரிப்பு வரிசைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் வீடியோ போர்ட்டலான யூ டியூபையும் கூகுள் வாங்கியது.
இந்த மாத நிலவரப்படி கூகுளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 300 பில்லியன் டாலர்! இந்த வெற்றி ஓரிரு நாட்களில் கிடைத்துவிடவில்லை. 50 தேசங்களில் பணிபுரியும் 60 ஆயிரம் ஊழியர்களின் உழைப்பும் விடாமுயற்சியும்தான் இந்த வெற்றிக்குக் காரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு சக போட்டியாளராக இருந்த யாஹுவையே அடிச்சி தூக்கிய கூகுளுக்கு 21 ஆண்டுகள் என்பது அல்வா சாப்பிடும் மேட்டர் தான்!
இதையும் படிங்க: 'ஆசியாவிலேயே முதுமையான' சிம்பன்சிக்கு உடல்நலக் குறைவு!