அமெரிக்காவிலுள்ள மிஸ்ஸிஸிபி என்னும் இடத்தில் குத்தகை விவசாயியின் மகனாகப் பிறந்தவர் ரிலே.பி. கிங். சிறுவயதில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒலிக்கும் இசையால் ஈர்க்கப்பட்டு உலக அரங்கில் ஐந்து முக்கிய கிட்டாரிஸ்ட்களில் ஒருவராக உலகை வலம்வந்தார்.
இவர் காதல், கலவி, பயணம், வாழ்க்கை முறை, இன்னல்கள், கருணை, இறப்பு முதலிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட டெல்டா ப்ளூஸ் இசையில் மிகவும் கைதேர்ந்தவர்.
இது மிஸ்ஸிஸிபி பகுதியில் நிலவும் வறுமையை அடிப்படையாகக்கொண்டு இசைக்கப்படுகிறது. இது ப்ளூஸ் இசையின் தழுவலாகப் பார்க்கப்படுகிறது. இந்தவகைப் பாடல்களில் கிட்டார், ஆர்மோனியத்தின் தாக்கங்களும், பாடலின் அர்த்தங்களும், உணர்ச்சிமிக்க குரல்களும் கேட்போரை உருகவைக்கும் தன்மை கொண்டது.
பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞரான இவர் 1949ஆம் ஆண்டில் தனது முதல் இசையை பதிவிட்டார். பின்னர் உலக சுற்றுப் பயணத்தில் கவனத்தைத் திருப்பிய அவர் மீண்டும் இசையில் மூழ்கி ஆண்டுக்கு 300-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தினார். இதையடுத்து புகழ்பெற்ற பி.பி. கிங் ராக், பாப் போன்ற பல்வேறுபட்ட இசைக் கலைஞர்களுடன் பணியாற்ற தொடங்கினார்.
இவருடைய "யூ நோ ஐ லவ் யூ", "வேக் ஆஃப் திஸ் மார்னிங்", "த்ரி ஓ கிளாக் ப்ளூஸ்" ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இவரை ஒரு தேசியளவில் வெற்றிபெறச்செய்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை சராசரியாகக் கொண்டிருந்தார். அவரது இசைநடை அவருக்கு "கிங் ஆஃப் தி ப்ளூஸ்" என்ற பட்டத்தைப் பெற்றுக்கொடுத்தது. இசைத் துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதை 15 முறை வென்றுள்ளார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கிங் தனது இறுதி நாட்களில், அதிகளவில் கச்சேரிகள் நடத்தாவிட்டாலும் ரசிகர்களின் மத்தியில் அவரது இசையின் மதிப்பு உயர்ந்துகொண்டே இருந்தது. 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு கச்சேரியில் தனது உடல்நிலைப் பற்றி தனது ரசிகர்களுக்கு தெரிவித்து கச்சேரிகளிலிருந்து விடைபெற்றார்.
இதையடுத்து, அவர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி உயிரிழந்தார். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு விஷம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மகள் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தான் விரும்பி இசையமைத்த டெல்டா ப்ளூஸ் இசையின் பிறப்பிடமும், கிங்கின் சொந்த ஊருமான மிஸ்ஸிஸிபியில் அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் தனது வாழ்நாளில் கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது (Grammy Lifetime Achievement Award), ராக் அண்ட் ரோல் விருது (Rock and Roll Hall of Fame induction), சுதந்திரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கம் (a Presidential Medal of Freedom ) என எண்ணற்ற விருதுகளை பெற்றிருந்தாலும் அவர் என்றும் விருதுகளின் பக்கம் சாயாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அம்மக்களின் வாழ்வியலை, உணர்ச்சிகளை வெளிக்கொணரவே எண்ணிணார். அதன் காரணமாகவே அவர் தனது 80ஆவது வயதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிரும்பினார்.
மக்களின் வாழ்வியலை இசையாக்க எண்ணிய பி.பி. கிங்கை பெருமைப்படுத்தும்விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும், அவரது இசைப்பயணத்தை விளக்கும்விதமாக சுருக்கமான காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.