உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றால் அனைத்து நாடுகளும் போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கின்றன. புதிய ஆய்வு ஒன்றில், கரோனா தொற்று மருத்துவமனை வார்டின் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 10 மணி நேரத்தில் பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தடுப்பூசியை கண்டுபிடிக்க, துல்லியமான மருத்துவத்தின்(Precision Medicine) கொள்ளைகள் உதவக்கூடும் என உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக பொருளாதார மன்ற துல்லிய மருத்துவத்தின் தலைவர் ஜெனியா டானா கூறுகையில், "துல்லியமான மருத்துவம் உலகளாவிய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஆனால் சிகிச்சைக்கான அணுகுமுறையானது சமமாக இல்லை.
ஏனெனில் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய நெறிமுறை கேள்விகள் ஏராளமாக உள்ளன. உலகளாவிய துல்லிய மருத்துவமானது, தனிப்பட்ட சிகிச்சைக்கு நியாயமான மற்றும் சமமான அணுகுமுறையை வழங்கும். இதனால் வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை நம்மால் கண்டுபிடிக்க இயலும்" என தெரிவித்துள்ளார்.