74ஆவது ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏழுநாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்துக்காக கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அமெரிக்கத் தொழிலதிபர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு 'குளோபல் கோல்கீப்பர்' விருது வழங்கினார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "தூய்மை இந்தியா #SwachhBharat திட்டத்துக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதானது 130 கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது. திட்டக் கனவை நிறைவேற்றியதோடு, மக்கள் அதனை தங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே ஆக்கிக்கொண்டுள்ளனர்.
நூறு கோடி இந்தியர்களும் ஒன்றுசேர்ந்து பாடுபட்டால் எந்தச் சவாலையும் வென்றிடலாம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
ஏழைகளும் பெண்களும் இதிலிருந்து பலனடைந்துள்ளனர். இதுபோன்று பல்வேறு வெகுஜன இயக்கங்கள் இந்தியாவில் செயல்பட்டுவருகின்றன" என்றார்.