உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாமல் இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கிறது. நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த மூன்று தினங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபராக அரியணை சூட 270 இடங்களை கட்டாயம் கைப்பற்ற வேண்டும். தற்போது வந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயக கட்சி 264 இடங்களையும், குடியரசு கட்சி 214 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், குடியரசு கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஜார்ஜியாவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பில் கிளிண்டன் ஜார்ஜியா மாகாணத்தை கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு அந்த மாகாணத்தில் குடியரசு கட்சி கையே ஓங்கி இருந்தது. பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் குடியரசு கட்சியே வெற்றி பெற்று வந்தது. தற்போது 28ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக கட்சி மீண்டும் அந்த மாகாணத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தொடர்ந்து டிரம்ப் முன்னிலை வகித்து வந்த பென்சில்வேனியா மாகாணத்தில் தபால் வாக்குகள் எண்ண ஆரம்பித்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது, குடியரசுக் கட்சியைவிட சுமார் ஆறாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று, ஜனநாயக கட்சி அங்கு முன்னிலையில் உள்ளது. இந்த இரு மாகாணங்களையும் ஜோ பிடன் கைப்பற்றி சாதனை புரிவார் என்று எதிர்பார்கப்படுகிறது.
இதையும் படிங்க:ட்விட்டர் நிறுவனத்திற்கு ட்விட்டர் மூலமே மிரட்டல்....கோபத்தின் உச்சிக்கே சென்ற டிரம்ப்!