இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் சந்தீப் தலிவால். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஷெரீப்-ன் துணை அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, காவல்துறை சார்பாக நடைபெறும் வழக்கமான போக்குவரத்து சோதனையில் சந்தீப் ஈடுபட்டிருந்தார். அப்போது அமெரிக்க நேரப்படி மதியம் 12.23 மணியளவில் ஒரு காரை சந்தீப் தலிவால் நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.
அந்த சோதனையை முடித்து காரைவிட்டு வெளியேறுகையில், திடீரென அந்த நபர் சந்தீப்-ன் பின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். அதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய ராபர்ட் சோலிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 2015 ஆம் ஆண்டில் ஷெரிப்பின் அலுவலகம், சீக்கியரான சந்தீப்பை அவரது பாரம்பரிய நம்பிக்கைச் சார்ந்த தலைப்பாகை மற்றும் தாடி உள்ளிட்டவற்றை அணிய அனுமதித்தபோது இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டதற்காக காவல்துறையினரால் தலிவால் நினைவுகூறப்பட்டார்.
இந்த சம்பவம் அவரது குடும்பத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. .
தலிவால் உயிரிழந்ததையடுத்து, காது கேளாத குழந்தையுடன் அவர் விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.