கரோனாவின் தாக்கம் உலகின் பல்வேறு பகுதிகளில் குறைந்திருந்தபோதிலும் சில நாடுகளில் அதன் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், 30 நிமிடத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடும் கருவியை வீட்டில் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அந்த கருவியை லூசிரா ஹெல்த் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
மூக்கிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கரோனாவை உறுதி செய்யும் இந்த கருவியை 14 வயதுக்கு மேலானவர்கள் பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் அவசர தேவைக்காக இந்தக் கருவியை உபயோகப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிர்வாகத்தின் ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், "பரிசோதனை மாதிரிகளை வீட்டிற்கு சென்று சேகரித்துக் கொண்டு அதனை சோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் கருவிக்கு அனுமதி வழங்கியுள்ளதன் மூலம் முடிவுகளை வீட்டிலிருந்து கொண்டே அறிந்து கொள்ளலாம்" என்றார்.
இந்தக் கருவியை மருத்துவமனையில் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14 வயதுக்கு கீழானவர்கள், இதனை பயன்படுத்தும் பட்சத்தில் அதன் மாதிரிகளை சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் சேகரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சோதனைக்கு உட்படுத்துவது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுவருகிறது.
அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே பத்து லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.