கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி தெளிப்பது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசு தெரிவித்துள்ளனர். இச்சமயத்தில் தான், 'எலக்ட்ரானிக் கன்சல்டேஷன்ஸ்' எனப்படும் வீடுகளிலிருந்தே மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளும் முறையை மக்கள் அதிகளவில் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள மாஸ் பொது மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் நீலம் ஏ. பாட்கே, மருத்துவர் ஜேசன் வாஸ்ஃபி தலைமையிலான மருத்துவக் குழு 2020இல் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 வரை தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்தவர்களின் ஆலோசனை கோரிக்கைகளை ஆய்வு செய்தனர்.
அதில், மக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களிடம் கோரிக்கை கேட்பதில் தான் மும்முரமாக இருந்துள்ளனர். இதில், மருத்துவர்களும் நோயாளிகளும் நேரில் சந்திக்காததால் கரோனா தொற்று யாருக்கும் பரவாது என்பதும் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர் பாட்கே கூறுகையில், "கரோனா தொற்றின் விளைவுகள் அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்கு இருக்கும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். எலக்ட்ரானிக் கன்சல்டேஷன்ஸ் முறையைப் பின்பற்றுவதை மக்கள் பாதுகாப்புகவும், வசதியாகவும் கருதுகின்றனர். மருத்துவமனைக்கு மக்கள் நேரடியாக வரவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினாலேயே எலக்ட்ரானிக் கன்சல்டேஷன்ஸ் முறையை உபயோகிப்பது அதிகமாகியுள்ளது" என்றார்.
மேலும், இந்த முறையை 2014ஆம் ஆண்டு முதலே மாஸ் பொது மருத்துவமனையில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மருத்துவமனைக்கு பிரத்யேகமாக வரும் மருத்துவ நிபுணர்களை தேவையற்ற நோயாளிகள் சந்திப்பதைக் குறைக்க முடியும். அதே போல், மருத்துவர்களைக் காண காத்திருக்கும் நோயாளிகளின் நேரமும் வீணாகமால் தடுக்க முடியும்.
குறிப்பாக, மார்ச் 11ஆம் தேதிக்கு முன்னும் பின்னும் மருத்துவமனைக்கு வந்து ஆலோசனைக் கேட்கும் நோயாளிகளையும், இணையம் வழியாக ஆலோசனை கேட்டவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், எலக்ட்ரானிக் கன்சல்டேஷன்ஸ் முறையில் மருத்துவ ஆலோசனை பெற்றவர்கள் பழைய நேரடி முறையை விட, இரு மடங்கு அதிகமாகியுள்ளனர் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து சென்னை வந்த பூனை: 3 மாதம் தனிமைப்படுத்தல் முடிந்து விடுவிப்பு!