உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா, கரோனா தொற்று காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அதிபர் ட்ரம்ப் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடனும் களமிறங்கவுள்ளனர்.
அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 6 முதல் 8 விழுக்காடு வரை ட்ரம்பைவிட ஜோ பிடன் முன்னணியில் உள்ளார்.
கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்துவிட்டதாக வாக்காளர்கள் கருதுவதால் பிடனுக்கான ஆதரவு பெருகியுள்ளது வல்லுனர்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், அதிபர் ட்ரம்ப் தனது பரப்புரை மேனேஜர் பிராட் பார்ஸ்கேலை அப்பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.
அவருக்கு பதிலாக பில் ஸ்டீபியன் பரப்புரை மேனேஜராக செயல்படுவார் என்றும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 16 வாரங்களே உள்ள நிலையில், ட்ரம்பின் இந்த முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பிராட் பார்ஸ்கேல் பரப்புரையின் டிஜிட்டல் பிரிவுக்கு தலைமை தாங்குவார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், பரப்புரைகளுக்கு மூத்த ஆலோசகராகவும் பிராட் பார்ஸ்கேல் தொடர்வார் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஓக்லஹோமாவின் துல்சாவில் நடைபெற்ற ட்ரம்பின் தேர்தல் பேரணி தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் கலந்துகொள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளதாக பார்ஸ்கேல் தெரிவித்திருந்தார். ஆனால், வெறும் 6,200 பேர் மட்டுமே பேரணியில் பங்கேற்றனர்.
இதனால் பெரும் ஏமாற்றமடைந்த ட்ரம்ப், தனது பரப்புரை மேனேஜரை நீக்கியுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.