கோவிட்-19 தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தத் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வளர்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கரோனாவால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த இரண்டு வாரங்களில் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவிட்-19 தொற்றிலிருந்து அதிபர் ட்ரம்பை பாதுகாக்க கடந்த இரண்டு வாரங்களாக அவருக்கு மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் அளிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து டாக்டர் சீன் கான்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த இரண்டு வாரங்களாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் அதிபர் ட்ரம்ப்க்கு அளிக்கப்பட்டது. உரிய மருத்துவ வல்லுநர்களின் மேற்பார்வையிலேயே ட்ரம்ப்க்கு மருந்துகள் அளிக்கப்பட்டன.
இந்த இரண்டு வாரங்களில் அதிபர் ட்ரம்பிற்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அதிபரின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரம்பின் உடல் எடை ஒரு பவுண்டுவரை அதிகரித்திருந்தாலும் அவரது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு தொடர்ந்து குறைந்துவருவதாகவும் சீன் கான்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 18,81,205 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,08,059 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரம்ப் குறித்து கேள்வி : 21 நொடிகள் மௌனம் காத்த கனடா பிரதமர்!