சவுதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் ஆலை, எண்ணெய் வயல்கள் மீது கடந்த 14ஆம் தேதி (சனிக்கிழமை) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
சவுதி எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்திஸ் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேவேளையில், இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "முன்னதாக, ஈரான் மீது நடத்தவிருந்த வான்வழித் தாக்குதல் முடிவு தடுத்து நிறுத்தப்பட்டது அமெரிக்காவின் வலிமையைக் காட்டுகிறது. தாக்குதலை தடுத்து நிறுத்தவதை விட தாக்குவது மிகச் சுலபம்" என்றார்.
கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடந்த திட்டமிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடுத்து நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.