போர்ட்-ஓ-பிரின்ஸ்: வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில், ஆகஸ்ட் 14ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியது. தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சிலிருந்து 125 கி.மீ. தொலைவில் இந்த நிலடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1,300 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹைதி, கரீபியன் கடலின் மூன்றாவது பெரிய தீவாகும். கிரேட்டர் அண்டிலிஸ் தீவுக்கூட்டத்தில், ஹிஸ்பானிலோ தீவில் அமைந்துள்ளது. இது கியூபா, ஜமைக்கா தீவுகளுக்கு கிழக்கிலும், பஹாமாஸ், கைகோஸ் தீவுகளுக்கு தெற்கிலும் உள்ளது.
இந்த நாடு டொமினிக்கன் குடியரசோடு நாட்டை பகிர்ந்துகொள்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
குறிப்பாக, ஹைதியில் 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆகப் பதிவானது. அப்போது லட்சக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹைதி அதிபர் ஜொவினெல் மோஸ் படுகொலை