அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், சாலையின் நடுவே காவலர் ஒருவரின் Choke hold எனப்படும் கோரப்பிடியில் சிக்கிய 47 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின அமெரிக்கர் உயிரிழந்தார். இணையத்தில் வைரலாகப் பரவிய அந்தக் காணொலியில், தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் ஃப்ளாய்ட் தொடர்ந்து குரல் எழுப்புகிறார்.
இருப்பினும் அவரை மினியாபோலிஸ் நகர் காவலர் விடாததால், மூச்சுத் திணறி அவர் உயிரிழந்தார். சுமார் எட்டு நிமிடங்களுக்கு மேல் ஜார்ஜை அந்தக் கோரப்பிடியில் காவலர் வைத்திருந்தார்.
இணையத்தில் இந்தக் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, கறுப்பின அமெரிக்கர்களின் மீதான காவல் துறையினரின் தொடர் வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெறும் இந்தப் போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தன.
குறிப்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாஷிங்டன் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு திங்கள்கிழமை மாலைவரை அமலில் இருக்கும் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது அதிபர் ட்ரம்ப்பை பாதுகாப்பு அலுவலர்கள் பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: போராட்டத் தீயை பற்றவைத்த ஃப்ளாய்ட்!