இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு உச்சம் அடைந்ததன் காரணமாக நாள்தோறும் 4 லட்சத்திற்கும் மேலாக பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதையடுத்து பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்தியாவின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா முதல்கட்ட மருத்துவ உதவிகளை விமானம் மூலம் அனுப்பி உள்ளது. அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கடந்த 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியிடம் தொடர்புகொண்டு கோவிட் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தியாவின் கரோனா பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "அமெரிக்கா கோவிட் காரணமாக தவித்து வந்த போது, இந்தியா பல்வேறு மருத்துவ உதவிகளை உடனடியாக முன்வந்து செய்தது. தற்போது இந்தியா சிக்கலான சூழ்நிலையில் உள்ளது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான இந்தியா குவாட் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளது.
எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவிற்கு அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா மேற்கொள்ள தயாராக உள்ளது. அதற்காக அரசு எந்திரம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. நான் இந்திய வம்சாவளியை சேர்ந்தவள். எனது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு எனது இதயத்தை உடைக்கும் விதமாக கவலை அளிக்கிறது" என்றார்.