கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தியா இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வேகப்படுத்த இந்நோய் வாய்ப்பளிக்கலாம் என உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியா குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "கரோனா வைரஸ் பரவல் துரதிருஷ்டவசமானதுதான். அது பல நாடுகளுக்குச் சவால் விடுத்துவருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள வாய்ப்புகளை நாம் பார்க்க வேண்டும். உதாரணமாக, இந்தியாவில் அடிப்படை மருத்துவக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுப்படுத்த, அது வாய்ப்பாக இருக்கலாம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வேகமாக அமல்படுத்த, அந்நாட்டு அரசு முனைப்பு காட்டிவருவது குறித்து நான் அறிவேன். நிலைமையை மாற்றியமைக்கலாம் என நான் நினைக்கிறேன்.
இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பினருக்கு அது உதவியாக அமையலாம். எனவே தான், அந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது உலகச் சுகாதார அமைப்பு சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. அது கரோனா பேரிடரை எதிர்கொள்ள உதவும்" என்றார்.
உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்தை மோடி தலைமையிலான அரசு 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் மூலம் ஒரு கோடி பேர் பயனடைந்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்பின் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் கண்டனம்!