கரோனா ஏற்படுத்திய தாக்கம், கடந்த 20 ஆண்டுகளில் தாய் சேய் நலன் உள்ளிட்டவற்றில் உலகளாவிய சுகாதாரத் துறை கண்ட வளர்ச்சியை அச்சுறுத்திவருகிறது என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கரோனாவுக்கு எதிரான போரை உலக நாடுகள் அடுத்தாண்டும் தொடர வேண்டும் என கூறியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்றவர்களை காட்டிலும் ஒரு குறிப்பட்ட மக்கள் தொகை பெரும் பாதிப்பை சந்தித்துவருகிறது. அதற்கு காரணமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்ள உலக நாடுகள் சுகாதார அமைப்பை விரைவாக வலுப்படுத்த வேண்டும்.
2020ஆம் ஆண்டு, உலகளாவிய சுகாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் பரவிய வைரஸ் நோய் பல பேரின் உயிரை பறித்து சுகாதார அமைப்பில் உள்ள பற்றாக்குறையை வெளிப்படுத்தியது.
கரோனாவை எதிர்கொள்ள பல நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகள் திணறிவருகின்றன. கரோனா போன்ற அவசரகாலத்தை எதிர்கொள்ள தயார் நிலையை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து உலக நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும். நாடுகளை ஒன்றிணைப்பதற்கான, சுகாதாரத் துறை மட்டுமல்லாமல் ஒரு அரசு முழுமையாக ஈடுபடுவதற்கான முக்கியத்துவத்தை தொடர்ந்து எடுத்துரைப்போம். வலுவான சுகாதாரத் துறையை கட்டமைத்து நல்ல உடல்நிலை பொருந்திய மக்கள் தொகையை உருவாக்க தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.