சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று, தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இயற்கையாக உருவானதல்ல. வூஹான் நகரிலுள்ள கிருமியியல் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து இது பரவியது என்ற தகவல் பரவியது. இந்தத் தகவல்களை ஆய்வாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப் கோவிட்-19 வூஹான் நகரிலுள்ள ஆய்வுக் கூடத்திலிருந்து பரவியதாகத்தான் தான் நம்புவதாகக் கூறினார். இருப்பினும் அது குறித்து மேலும் தகவல்களை அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
எந்த அடிப்படையில் வைரஸ் கிருமியியல் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து பரவியதாக குற்றம்சாட்டுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதை என்னால் கூற முடியாது. அதை சொல்ல எனக்கு அனுமதியில்லை" என்றார்.
'வைரஸ் பரவலுக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் பொறுப்பேற்க வேண்டுமா?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் அப்படிச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், வைரஸ் பரவலை நிச்சயம் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். வைரஸ் தொற்று சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இதை அவர்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்றுதான் உலகமே கருதுகிறது."
சீனா வூஹான் நகரிலேயே இந்த வைரஸ் தொற்றை நிறுத்தியிருக்கலாம். சீனா அறிவியல் ரீதியாக முன்னேறிய ஒரு நாடு. இதனால் வைரஸ் பரவலை, அவர்களால் நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவர்களால் நிறுத்த முடியவில்லை, அல்லது நிறுத்த விரும்பவில்லை. இப்போது அவர்களால், உலகமே பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது.
சீனா, தன் நாட்டிற்கு வரும் விமானங்களின் போக்குவரத்தை நிறுத்தியது. ஆனால், சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களை அவர்கள் நிறுத்தவில்லை. சீனா ஏன் இந்த முடிவை எடுத்தது?
சீனாவிருந்து வரும் விமானப் போக்குவரத்திற்கு, நான் ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே நல்வாய்ப்பாகத் தடை விதித்தேன். அதைத்தொடர்ந்து ஐரோப்பா நாடுகளின் போக்குவரத்திற்கும் தடை விதித்தோம். இதன் காரணமாக, அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது" என்றார், ட்ரம்ப்.
கோவிட்-19 தொற்று காரணமாக, அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்து 95 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 63,861 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவு!