உலகளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா தற்போது முதலிடத்தில் உள்ளது. கடந்த ஒரேநாளில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 85 ஆயிரம் பேர் அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கரோனாவால் இதுவரை ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
கரோனாவால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பொருளாதாரம் பெருமளவில் முடங்கியுள்ளது. பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்துவருதால் அங்கு விரைவில் ஊரடங்கைத் தளர்த்தி பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
இதற்கு அமெரிக்க ரிசர்வ் வங்கியான பெட்ரல் ரிசர்வ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் முக்கியம் என்றபோதிலும் மக்களின் உயிர்தான் முதன்மையானது என பெட்ரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இத்தகைய பெருந்தொற்று காலத்தில் மருத்துவ நிபுணர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்கொள்ள 2 லட்சம் கோடி டாலர் அவசர நிதி - மசோதா நிறைவேற்றம்