அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் செயின்ட் சைமன்ஸ்-ஜெகைல் ஆகிய தீவுகளுக்கு இடையே செயின்ட் சைமன்ஸ் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் வழியாக சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த அமெரிக்க கடலோரக் காவல் படையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 20 பேரை மீட்டனர். மேலும், மாயமாகியுள்ள நான்கு பேரை தேடிவருகின்றனர்.
இது குறித்து அந்நாட்டு கடலோரக் காவல்படை வெளியிட்டிருந்த அறிக்கையில், "656 அடி நீளமுள்ள 'கோல்டன் ரே' என்ற சரக்குக் கப்பல் தீ விபத்து ஏற்பட்டதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, கப்பலில் 24 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
விபத்து குறித்து எங்களுக்கு (சார்லேஸ்டான் வாச்ஸ்டான்டர்ஸ் கடலோரக் காவல் படை) தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 2 மணி இருக்கும். இதையடுத்து, விரைந்து சென்று விபத்தில் சிக்கிய 20 பேரை மீட்டோம்.
மேலும் நான்கு பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தீ விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த கப்பலை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.