தலிபான் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக வெளியேறிவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 ஆயிரம் மக்களுக்கு அடைக்கலம் வழங்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் மார்கோ மசிடீனோ வெளியிட்டுள்ளார்.
கனடா அமைச்சரின் அறிவிப்பு
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்களின் குடியேற்றத்திற்கு கனடா அரசு தூதரகத்தின் மூலம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்கானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பாதிப்பிற்குள்ளான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அடைக்கலம் தர கனடா முடிவெடுத்துள்ளது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கனடா அரசு கவனம் செலுத்துகிறது" என்றார்.
அமைதி ஒப்பந்தத்தின் விளைவு
ஆப்கான்-அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொள்வதாக முன்னதாக அறிவித்தது. தற்போது அமெரிக்கப் படை வீரர்கள் நாடு திரும்பு நிலையில், ஆப்கானில் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது.
தலைநகர் காபூலைக் குறிவைத்து தங்களது நகர்வுகளை மேற்கொள்ளும் தலிபான், தற்போது பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இதையும் படிங்க: தலிபான்களுடன் ஆப்கான் அரசு தொடர்ந்து சண்டையிடும்- அம்ருல்லா சலே