அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இரு கட்சிகளும் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பிற்கு எதிராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ஜோ பிடன் அதிபரானால் எண்ணெய் துறையை ஒட்டுமொத்தமாக மூடிவிடுவார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டு அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அமெரிக்காவின் ஜிடிபியில், பெரும் பகுதி இன்னும் எண்ணெய் துறையையே நம்பியிருக்கிறது.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிபிசி தொலைக்காட்சிக்கு ஜோ பிடன் அளித்த பேட்டியில், "நான் அதிக மாசை ஏற்படுத்தும் எண்ணெய் (fossil fuel) உற்பத்திக்கு வழங்கும் சலுகைகளை மட்டுமே நிறுத்த வேண்டும் என்கிறேன். ஒட்டுமொத்த எண்ணெய் துறையையே மூட வேண்டும் என்பது எனது எண்ணம் இல்லை" என்றார்.
முன்னதாக, சில நாள்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தல் தொடர்பான மூன்றாவது விவாதத்தின் இறுதியில், "நீங்கள் வெற்றிபெற்றால் எண்ணெய் துறையை முடிவிடுவீர்களா?" என்று ஜோ பிடனை நோக்கி அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிடன், "நான் எண்ணெய் துறையை மாற்ற வேண்டும் என்றே விரும்புகிறேன். ஏனென்றால், இந்த எண்ணெய் தொழிற்சாலைகளால் பெரும் காற்று மாசு ஏற்படுகிறது.
அதிக மாசை ஏற்படுத்தும் கச்சா எண்ணெய்க்கு பதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி அமெரிக்கா செல்ல வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், முன்னதாக வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி, ஏற்கெனவே ஐந்து கோடி அமெரிக்கர்கள் வாக்களித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறுதிகட்ட பரப்புரையில் பிடனின் மகனை குறிவைத்துத் தாக்கிய ட்ரம்ப்