ஆப்கானிஸ்தானிலிருந்து படை விலகல் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
20 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைத்து படை வீரர்களையும் அமெரிக்கா திரும்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நடவடிக்கை காரணமாக ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் போர் தலைதூக்கியுள்ளது. தலிபான் அமைப்பினர் ஆப்கான் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி பல்வேறு மாகாணங்களையும் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர்.
இதையடுத்து அமெரிக்காவின் படை விலகல் முடிவுக்கு பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இதற்கு அதிபர் ஜோ பைடன் பதிலளித்துள்ளார்.
முடிவில் மாற்றமில்லை
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணத்தை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செலவழித்துள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரிழப்பையும், காயங்களையும் அமெரிக்கா கண்டுள்ளது.
எனவே, அமெரிக்க படையினர் வெளியேற காலம் வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் ஒன்றிணைந்து தங்களுக்கான அமைதியை தேடிக்கொள்ள வேண்டும்.
எனது முடிவில் எந்தவித வருத்தமும் இல்லை. படை விலகல் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜப்பானை புரட்டிப்போட்ட லுபிட் சூறாவளி